பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மாநாட்டில் தீர்மானம்


பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 July 2018 10:45 PM GMT (Updated: 12 July 2018 3:11 PM GMT)

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று எஸ்.சி, எஸ்.டி. ஊழியர் நல சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

பி.எஸ்.என்.எல். எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் நல சங்கத்தின் ஐந்தாவது மாவட்ட மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் வரவேற்று பேசினார். திருச்சி மாவட்ட பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கண்டிப்பதோடு, சீராய்வு மனுவை முறையாக கண்காணிக்கவும், நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டம் இயற்றவும் வேண்டும். பட்டியல் இன மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்பதோடு அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பலர் ஒப்பந்த ஊழியராக குறைந்த வருமானத்தில் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக பணியாற்றி வருகிறார்கள். நிரந்தர ஊழியர்களும் வயது முதிர்வின் காரணமாக கடந்த 18 ஆண்டுகளில் 80 சதவீதம் பேர் ஓய்வு பெற்று விட்டதால் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பெருமாள், முதன்மை ஆலோசகர் நம்பியார், மாநில தலைவர் கனகராஜன், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க மாநில துணை செயலாளர் காமராஜ், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ரவீந்திரன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.


Next Story