கோவில் குளத்தை சுற்றியுள்ள ரூ.25 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


கோவில் குளத்தை சுற்றியுள்ள ரூ.25 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 13 July 2018 1:00 AM IST (Updated: 13 July 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

நந்திவரம் கிராமத்தில் சுமார் 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்திர நாயகி சமேத நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் குளத்தை சுற்றியுள்ள ரூ.25 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் அடங்கிய நந்திவரம் கிராமத்தில் சுமார் 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்திர நாயகி சமேத நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி நந்தி தீர்த்தக்குளம் மிகவும் மாசடைந்து காணப்பட்டது.

 மேலும் இந்த கோவில் குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் நந்தி தீர்த்தக்குளத்தை சீரமைக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து கடந்த மே மாதம் குளத்தை சீரமைக்கும் பணி தொடங்கி தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அப்படியே இருந்தது.

இது குறித்து பொதுமக்களும், பக்தர்களும் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் 25–க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் 2 பொக்லைன் எந்திரங்களை நந்தீஸ்வரர் கோவில் குளத்திற்கு கொண்டு வந்து குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 21 குடிசைகளை இடித்து தள்ளினார்கள். இதே போல கோவில் மதில்சுவர் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது. சுற்றுச்சுவர் அமைப்பதற்காக குழி தோண்டும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

நந்தீஸ்வரர் கோவில் குளத்தை சுற்றியுள்ள மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலத்தின் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியதால் பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story