கொண்டலாம்பட்டியில் கழிவுகளை கொட்டுவதால் மாசடைந்து வரும் திருமணிமுத்தாறு


கொண்டலாம்பட்டியில் கழிவுகளை கொட்டுவதால் மாசடைந்து வரும் திருமணிமுத்தாறு
x
தினத்தந்தி 12 July 2018 11:33 PM GMT (Updated: 12 July 2018 11:33 PM GMT)

சேலம் கொண்டலாம்பட்டியில் திருமணிமுத்தாற்றில் கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கொண்டலாம்பட்டி,

சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள நத்தக்காடு வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த தண்ணீர் கொண்டலாம்பட்டி ராஜவாய்க்கால் வழியாகவும் செல்கிறது. திருமணிமுத்தாறு தண்ணீர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, நெல், சோளம் உள்ளிட்ட பல பயிர்களுக்கு பாசன நீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திருமணிமுத்தாற்றில் சிவப்பு நிறத்தில் தண்ணீர் வருகிறது. இதனால் விவசாய பயிர்களில் நோய் தாக்கப்பட்டு கருகி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தண்ணீரில் குளித்தால் உடலில் அரிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனிடையே இந்த மாசுபட்ட தண்ணீர் புத்தூர் ஏரி, கொட்டநத்தாம் ஏரி, பெரிய ஏரி, வீரபாண்டி ஏரி ஆகியவற்றுக்கு செல்கிறது. இதனால் ஏரிகளில் மீன்கள் செத்து மிதப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது.

சேலத்தில் இருந்து வரும் சாயப்பட்டறை கழிவுநீர், செப்டிங் டேங் கழிவுகள், மருத்துவ கழிவுகள் ஆகியவை திருமணிமுத்தாற்றில் கொட்டப்படுகின்றன. கழிவுகளை இரவு நேரங்களில் மினி லாரிகளில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் தான் தண்ணீர் மாசடைந்து தற்போது சிவப்பு வண்ணத்தில் வருகிறது. மேலும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது.

கழிவுகளை கொட்ட வரும் போது லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியும் யாரும் கண்டுகொள்ள வில்லை. எனவே பொதுமக்கள், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு விரைவில் கழிவுகளை திருமணிமுத்தாற்றில் கொட்டவிடாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story