மண்சரிவால் 3 வீடுகள் சேதம்; பொதுமக்கள் பீதி
மஞ்சூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை காரணமாக, மண்சரிவுஏற்பட்டு, 3 வீடுகள் சேதம் அடைந்தன. இதனால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கிண்ணக் கொரை, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, எடக்காடு உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் 24 மணி நேரம் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் கடும் குளிருடன் மழையின் தாக்கத்தால் தோட்டத்திற்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
இந்த தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வரு கிறது. மேலும் மழையுடன் காற்றும் வீசுவதால் சாலையோரங்களில் உள்ள மரங்கள் ஆங்காங்கே அடிக்கடி விழுகின்றன. குறிப்பாக கிண்ணக்கொரை, கேரிங்டன், தாய் சோலை பகுதிகளில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து கிடப்பதை பஸ்களில் வரும் பயணிகளே ஆங்காங்கே அப்புறப்படுத்துகின்றனர். மேலும் சாலையோரங்களில் ஓரிரு இடங்களில் மண் திட்டுகள் இடிந்து விழுந்து கிடப்பதால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும் உண்டு.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால்மஞ்சூர் அருகில் உள்ள எடக்காடு - எமரால்டு சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகாமையில் உள்ள வீடுகளின் முன்பு இருந்த மண் திட்டுகள் சுமார் 100 அடி உயரத்திற்கு கீழே சரிந்தது. இதனால் அங்குள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்கி இடியும் நிலையில் உள்ளன. இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் அருணாசலம், கோவிந்தம்மாள், காளிமுத்து ஆகியரது வீடுகள் சேதம் அடைந்தன. இதனால் அந்த பகுதிமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதற்கிடையில் மண்சரிவு குறித்து தகவல் கிடைத்ததும் குந்தா பகுதி தாசில்தார் ஆனந்தி மற்றும் வருவாயத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர், சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.4100 நிவாரண நிதி வழங்கப்படும் என்றார்.
மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக மண்ணை அகற்றி இடியும் தருவாயில்அந்தரத்தில் தொங்கும் வீடுகளை பாதுகாக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story