சிவசேனா கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் மாநகராட்சிக்கு, அரசு உத்தரவு


சிவசேனா கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் மாநகராட்சிக்கு, அரசு உத்தரவு
x
தினத்தந்தி 13 July 2018 11:45 PM GMT (Updated: 13 July 2018 11:45 PM GMT)

மும்பையில் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டிய சிவசேனா கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

மும்பை,

மும்பை காட்கோபரை சேர்ந்த சிவசேனா கவுன்சிலர் துக்காராம் பாட்டீல். இவர் கடந்த மாநகராட்சி தேர்தலின் போது, போட்டியிட்டு முதன்முறையாக கவுன்சிலர் ஆனார். இவர் முன்னதாக காட்கோபர் மேற்கு எல்.பி.எஸ்.மார்க் பகுதியில் சட்டவிரோதமாக மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வணிகம் சார்ந்த 2 கட்டிடங்களை கட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து சட்டவிரோத கட்டுமானத்தை இடித்து தள்ளியது.

இந்தநிலையில், கவுன்சிலர் ஆன பின்னர் துக்காராம் பாட்டீல் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதாக தெரிகிறது.

மாநகராட்சி சட்டத்தின்படி சட்டவிரோதமாக கட்டுமானத்தில் ஈடுபடும் கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய முடியும். இதுபற்றி அவரது பக்கத்து வார்டை சேர்ந்த பா.ஜனதா கவுன்சிலர் சாக்சி தல்வி மாநில அரசின் நகர மேம்பாட்டுத்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் கவுன்சிலர் துக்காராம் பாட்டீலை ஒரு மாதத்திற்குள் தகுதி நீக்கம் செய்யும்படி மாநகராட்சிக்கு நகர மேம்பாட்டு துறை உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளது.

இதுபற்றி மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிவசேனாவை சேர்ந்த யஸ்வந்த் ஜாதவ் கூறுகையில், கவுன்சிலர் துக்காராம் பாட்டீல் சட்டவிரோதமாக எந்த கட்டிடத்தையும் கட்டவில்லை. அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டி அரசு அனுப்பியுள்ள உத்தரவு தவறானதாகும். சட்ட ரீதியாக இதை எதிர்கொள்வோம், என்றார்.


Next Story