டீசல் விலை உயர்வை கண்டித்து வேலைநிறுத்தம் கரூரில் 2,600 லாரிகள் ஓடாது


டீசல் விலை உயர்வை கண்டித்து வேலைநிறுத்தம் கரூரில் 2,600 லாரிகள் ஓடாது
x
தினத்தந்தி 18 July 2018 4:15 AM IST (Updated: 18 July 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை உயர்வை கண்டித்து வருகிற 20-ந் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் தொடங்குவதால் கரூரில் 2,600 லாரிகள் ஓடாது என கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கரூர்,

டீசல் விலை உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும், டீசல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும், மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதை குறைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைத்து ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், புதுடெல்லி ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் உள்ளிட்ட சங்கங்கள் வருகிற 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

அந்த வகையில் கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கமும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிற 20-ந் தேதியிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இது தொடர்பாக கரூர் சங்க தலைவர் வக்கீல் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டம் முழுவதும் எங்கள் சங்கம் சார்பில் மணல், ஜல்லி ஏற்றி செல்லும் லாரி, ரெகுலர் சர்வீஸ் லாரி உள்பட 2,000 லாரிகளும், 600 மினி லாரிகளும் வருகிற 20-ந் தேதி காலை 6 மணியிலிருந்து இயக்கப்படாது. மத்திய அரசின் நெருக்கடியால் லாரித்தொழில் பாதிக்கப்பட்டிருப்பதால் உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மத்திய- மாநில அரசுகள் முன்வர வேண்டும். லாரிகள் இயக்கப்படாததால் வணிகர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் சிரமங்களுக்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் ஜவுளி, கொசுவலை உள்பட பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதிக்காக அனுப்பிவைப்பதற்கும், மூலதன பொருட்களை வாங்கிவருவது உள்ளிட்டவற்றிற்கும் லாரி போக்குவரத்தினை தான் பெருமளவு பயன் படுத்துகின்றனர். கைத்தறி நெசவாளர்கள் தங்களது உற்பத்தி துணிகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கவும் லாரியை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் தான் கரூரில் தினமும் கோடிக்கணக்கில் தொழில் சார்ந்த பண பரிவர்த்தனைகள் நடக்கின்றன. எனவே லாரிகள் வேலை நிறுத்தத்தால் கரூரில் ஜவுளி, கொசுவலை உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் தேக்கமடைய வாய்ப்புள்ளன. மேலும் அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், லாரி வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஏற்றுமதி பணிகளை முடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். 

Next Story