ஆழ்குழாய் மூலம் நிரம்பிய குளம்


ஆழ்குழாய் மூலம் நிரம்பிய குளம்
x
தினத்தந்தி 19 July 2018 4:30 AM IST (Updated: 18 July 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

தொண்டியில் ரூ.19 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்குழாய் மூலம் குளம் நிரம்பி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தொண்டி,


தொண்டி பேரூராட்சியில் 22,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் இங்குள்ள குளங்கள், கிணறு மற்றும் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தொண்டி பேரூராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் தினமும் குளிப்பதற்கு மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் கடும் வறட்சி காரணமாக இங்கு நிலத்தடிநீர் அதலபாதாளத்துக்கு போய்விட்டது.

இந்த நிலையில் தொண்டி மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் அடிப்படையில் தொண்டி வடக்கு தெரு ஜமாத் நிர்வாகம் சார்பில் புதிய ஆழ்குழாய் அமைக்க முடிவு செய்த னர். அதன் அடிப்படையில் 7 குடும்பத்தினர் புதிய ஆழ்குழாய் அமைக்க பல லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளனர். அதனைதொடர்ந்து தொண்டி மேலப்பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் உள்ள நிலத்தில் ரூ.19 லட்சம் மதிப்பில் சுமார் 1300 அடி ஆழத்தில் புதிதாக ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆழ்குழாய் கடற்கரை அருகில் இருந்த போதிலும் நல்ல தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் தொண்டி ஜமாத் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த ஆழ்குழாய் மூலம் வறண்டு கிடந்த மேலப்பள்ளிவாசல் அருகில் உள்ள அன்னி ஊற்று குளத்தில் தண்ணீரை நிரப்பியுள்ளனர். சுமார் ஒரு மாத காலம் தண்ணீரை பாய்ச்சியதை தொடர்ந்து 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது.

இதனால் இந்த குளத்திற்கு தொண்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர். இந்த குளத்தில் நீர் நிரம்பியுள்ளதால் இந்த பகுதியில் உள்ள வறண்டு போன கிணறுகளில் தற்போது நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொண்டியில் ரூ.19 லட்சம் செலவில் புதிய ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த வடக்கு தெரு ஜமாத் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story