கதிர்வீச்சின் தாக்கத்தால் பாதிப்பு செல்போனில் அதிக நேரம் பேசுவதை தவிர்க்க வேண்டும்


கதிர்வீச்சின் தாக்கத்தால் பாதிப்பு செல்போனில் அதிக நேரம் பேசுவதை தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 19 July 2018 4:15 AM IST (Updated: 19 July 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் கதிர்வீச்சின் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்றும், செல்போனில் அதிக நேரம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் திருச்சியில் நடந்த கருத்தரங்கில் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார் கூறினார்.

திருச்சி,

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) செல்போன் நிறுவனங்கள் சொல்ல மறுப்பது என்ன? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய தொழில்நுட்ப கழகம்(ஐ.ஐ.டி.) மும்பையின் பேராசிரியர் கிரிஷ்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

செல்போனில் தொடர்ந்து 20 நிமிடங்கள் பேசினால் காதின் வெப்பநிலை ஒரு டிகிரி உயருகிறது. இது தொடர்ந்தால் காதுகளில் வலி உண்டாகி பின்பு கேட்கும் திறனை இழக்க வேண்டி வரும். அதற்காக செல்போனை அறவே நிறுத்திவிட முடியாது. கதிர்வீச்சின் தாக்கத்தை அளவாக வைத்து இருக்க வேண்டும்.

ஒவ்வொரு செல்போன் களிலும் ஏற்படும் கதிர்வீச்சின் தாக்கத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். செல்போனில் அதிகநேரம் பேசுவதை தவிர்க்க வேண்டும். ஒருநாளைக்கு அதிகபட்சமாக அரைமணிநேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு, 2011-ல் செல்போன் கதிர்வீச்சினை (கிளாஸ் 2-பி பிரிவில்) புற்றுநோய் காரணியாக அறிவித்துள்ளது. செல்போன் டவர்கள் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவை இனங்கள் அழிந்து வருகிறது. மனிதர்களுக்கு மூளைக்கட்டி, புற்றுநோய், மரபணு மாற்றம், தளரும் நினைவாற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. கடந்த 10 வருடத்தில் வாழ்வுமுறை மாற்றம் எதனால் நிகழ்ந்தது என்று சிந்திக்க வேண்டும். செல்போனை மேல் சட்டை பாக்கெட்டில் வைப்பதால் இருதய கோளாறுகள், பேன்ட் பாக்கெட்டில் வைப்பதால் பாலியல் பிரச்சினைகள் உள்பட பல்வேறு தீமைகள் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் என்.ஐ.டி. பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story