மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு


மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 July 2018 10:30 PM GMT (Updated: 19 July 2018 10:01 PM GMT)

மருத்துவ கல்லூரியில் ‘சீட்‘ வாங்கி தருவதாக கூறி ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக காங்கிரஸ் பிரமுகர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகர்கோவில்,

மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு ஆலுவிளையை சேர்ந்தவர் பாபு. இவர், நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

என் மகள் பிளஸ்-2 படித்து முடித்திருக்கிறார். அவருக்கு மருத்துவம் படிக்க விருப்பம். இதை அறிந்த திருவிதாங்கோடு ஆர்.சி.தெருவை சேர்ந்த அஜன், மேக்கா மண்டபம் கீழ ஈத்தவிளையை சேர்ந்த சாமுவேல் ஆகியோர் சிலருடன் எனது வீட்டுக்கு வந்து, பணம் கொடுத்தால் மருத்துவ கல்லூரியில் ‘சீட்‘ வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்கள். இதை நம்பிய நான் ரூ.10 லட்சம் கொடுத்தேன். மேலும் என் நண்பர்களான சசிகுமார் மற்றும் ஜெயகுமார் ஆகியோரின் பிள்ளைகளுக்கும் மருத்துவ கல்லூரியில் ‘சீட்‘ வாங்கி தருவதாக கூறினார்கள். அதைத் தொடர்ந்து சசிகுமாரிடம் இருந்து ரூ.10 லட்சமும், ஜெயகுமாரிடம் இருந்து ரூ.3 லட்சமும் வாங்கினார்கள். நான் உள்பட 3 பேரிடமும் சேர்த்து மொத்தம் ரூ.23 லட்சம் பெற்றார்கள். அஜனும், சாமுவேலும் வாங்கிய பணத்தை படந்தாலுமூடுவை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியது போல மருத்துவ கல்லூரியில் ‘சீட்‘ வாங்கி தரவில்லை. இதுதொடர்பாக நாங்கள் கேட்டபோது ரூ.2 லட்சத்தை மட்டும் திருப்பி தந்தனர். மீதமுள்ள ரூ.21 லட்சத்தை கொடுக்கவில்லை. பணத்தை வாங்கி கொண்டு மோசடி செய்து விட்டார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அஜன், சாமுவேல், ரமேஷ்குமார் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் ரமேஷ்குமார் காங்கிரஸ் பிரமுகர் ஆவார். 

Next Story