திண்டுக்கல் வியாபாரி தெலுங்கானாவுக்கு கடத்தல்


திண்டுக்கல் வியாபாரி தெலுங்கானாவுக்கு கடத்தல்
x
தினத்தந்தி 20 July 2018 4:48 AM IST (Updated: 20 July 2018 4:48 AM IST)
t-max-icont-min-icon

மிளகாய் வியாபாரத்தில் ரூ.53 லட்சம் மோசடி செய்த திண்டுக்கல் வியாபாரியை சிலர் தெலுங்கானாவுக்கு கடத்தி சென்றனர்.

திண்டுக்கல்,


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய தம்பி பிரேம்குமார். இருவரும் மொத்தமாக மிளகாய் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தெலுங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியை சேர்ந்த கொம்மல் ரெட்டி என்பவரிடம் இருந்து மொத்தமாக மிளகாய் வாங்கி, அதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்து வந்துள்ளனர்.

கொம்மல் ரெட்டி, அந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து மிளகாய் வாங்கி, அதனை விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில், மிளகாய் கொள்முதல் செய்ததற்காக, குணசேகரனும், பிரேம்குமாரும், கொம்மல் ரெட்டிக்கு ரூ.53 லட்சம் கொடுக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கள் பணத்தை கொடுக் காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொம்மல் ரெட்டி அளித்த புகாரின் பேரில், அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்தநிலையில் பணம் குறித்து பேசுவதற்காக, கொம்மல் ரெட்டி மற்றும் சிலர் திண்டுக்கல்லுக்கு வந்துள்ளனர். அவர்கள், திண்டுக்கல்லில் 2 நாட்களாக தங்கி இருந்து குணசேகரனிடம் பேசி பணத்தை வாங்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்க முன்வரவில்லை என்று தெரிகிறது.

பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கூறி குணசேகரனை, கொம்மல் ரெட்டி தரப்பினர் காரில் கடத்தி சென்றுவிட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர் தெலுங்கானாவுக்கு கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், குணசேகரனை மீட்பதற்காக தெலுங்கானாவுக்கு விரைந்துள்ளனர். 

Next Story