மதுவில் விஷம் கலந்து கொடுத்தனர் கார் டிரைவர் கொலை வழக்கில் கள்ளக்காதலி - நண்பர் கைது


மதுவில் விஷம் கலந்து கொடுத்தனர் கார் டிரைவர் கொலை வழக்கில் கள்ளக்காதலி - நண்பர் கைது
x
தினத்தந்தி 23 July 2018 5:00 AM IST (Updated: 23 July 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

மதுவில் விஷம் கலந்து கொடுத்து கார் டிரைவரை கொலை செய்த வழக்கில் அவருடைய கள்ளக்காதலி மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் புதைத்தனர்.

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் மெயின்ரோடு ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 36). கார் டிரைவர். இவருடைய மனைவி நளினி(34). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

கடந்த 15-ந்தேதி இரவு வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் தனது நண்பரான குமரேசன்(36) என்பவருடன் மது அருந்திய ராஜேஷ், போதை அதிகமானதால் காரிலேயே படுத்துக்கொண்டார்.

இதனால் குமரேசன், காருடன் ராஜேஷை அவரது வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு சென்று விட்டார். போதையில் இருந்த ராஜேஷை, காரிலேயே படுக்க வைத்து விட்டு அவருடைய மனைவி நளினி வீட்டுக்குள் சென்று விட்டார்.

மறுநாள் காலையில் பார்த்தபோது ராஜேஷ் காருக்குள்ளேயே இறந்து கிடந்தார். அளவுக்கு அதிகமாக குடித்ததால் நாக்கு வறண்டு அவர் இறந்து விட்டதாக நினைத்து அவரது உறவினர்கள், ராஜேஷ் உடலை புதைத்து விட்டனர்.

ஆனால் நளினி, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மதுரவாயல் உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்டமாக ராஜேஷின் செல்போனை கைப்பற்றி, அவர் கடைசியாக யாருடன் பேசி உள்ளார்? என போலீசார் விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் குமரேசனுடன்தான் பேசி இருப்பது தெரிந்தது.

பின்னர் இருவரும் கடைசியாக மது அருந்திய இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி அங்கு வரும் குமரேசன், தான் தயாராக வாங்கி வந்த மதுவில் விஷத்தை கலந்து வைக்கிறார். பின்னர் செல்போனில்பேசுகிறார்.

சிறிது நேரத்தில் அங்குவரும் ராஜேசுக்கு, தான் விஷம் கலந்து வைத்து இருக்கும் மதுவை கொடுக்க, அவரும் அதை வாங்கி அருந்துகிறார். பின்னர் காரின் முன்புறம் ராஜேஷை அழைத்துச் செல்லும் குமரேசன், தனது கையால் அவரது தலையில் ஓங்கி அடிக்கிறார்.

இதனால் ராஜேஷ், நிலைதடுமாறி கார் மீது விழுந்து, அங்கிருந்து சரிந்து தரையில் விழுந்து மயங்குகிறார். பின்னர் குமரேசன் எதுவும் தெரியாததுபோல் தனது மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து செல்கிறார்.

இந்த காட்சிகள் முழுவதும் அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்பிறகுதான் மீண்டும் அங்கு வந்த குமரேசன், ராஜேஷை காருடன் அவரது வீட்டில் கொண்டு போய் விட்டு உள்ளார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகளை ஆதாரமாக வைத்து, இதனை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், குமரேசனை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர், அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி(34) என்பவர்தான் ராஜேசை கொலை செய்யும்படி கூறி விஷத்தை கொடுத்ததாக கூறினார். இதையடுத்து பத்மாவதியையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் கொலையுண்ட ராஜேசுக்கும், பத்மாவதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அதன்பிறகு குமரேசனுடன் பத்மாவதிக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர், ராஜேசுடன் பழகுவதை நிறுத்தினார். இதனால் ராஜேஷ், குடிபோதையில் பத்மாவதி வீட்டுக்கு சென்று அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இதில் ஆத்திரமடைந்த பத்மாவதி, ராஜேசை தீர்த்துக்கட்டி விட்டால் நாம் இருவரும் மகிழ்ச்சியாக சேர்ந்து இருக்கலாம் என்று கூறி, ராஜேசை மதுவில் விஷம் கலந்து கொலை செய்துவிடும்படி குமரேசனிடம் விஷத்தை கொடுத்து அனுப்பி உள்ளார்.

அதன்படியே குமரேசனும், மதுவில் விஷம் கலந்துகொடுத்து ராஜேசை கொலை செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைதான கள்ளக்காதலி பத்மாவதி, நண்பர் குமரேசன் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

கைதான குமரேசனுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். பத்மாவதிக்கும் திருமணமாகி கணவர், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் நேற்று மதுரவாயல் ஓம்சக்தி நகரில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்ட ராஜேசின் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர். மதுரவாயல் தாசில்தார் செந்தில்வேல் முன்னிலையில் அரசு டாக்டர்கள் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தினர். அதன்பிறகு மீண்டும் ராஜேஷ் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

ராஜேஷ், குடிபோதையில் இறந்து விட்டதாக நினைத்து அவரது உடலை உறவினர்கள் புதைத்து விட்டதால், கொலை வழக்கில் இருந்து தாங்கள் தப்பித்து விட்டதாக பத்மாவதி, குமரேசன் இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் ராஜேஷின் மனைவி அளித்த புகாரின்பேரில் போலீசார் துரிதமாக விசாரணை நடத்தி, சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Next Story