மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை சி.பி.ஐ. கண்காணிக்கும்படி உத்தரவிட முடியாது, தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை சி.பி.ஐ. கண்காணிக்கும்படி உத்தரவிட முடியாது என தலைமை நீதிபதி தீர்ப்பளித்தார்.
மதுரை,
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மதுரை தோப்பூரில் ரூ1,500 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. மருத்துவமனை கட்டுமான பணிகளில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் சி.பி.ஐ. சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எய்ம்ஸ் வேலைவாய்ப்பில் 35 சதவீத பணியிடங்களை தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கவும், மருத்துவமனை கட்டுமான பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "மனுதாரர் இந்த வழக்கை பொதுநல மனுவாக எந்த அடிப்படையில் தொடர்ந்துள்ளார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உரிய நேரத்தில் கட்டி முடிக்கும் என்று நம்புகிறோம். மேலும் கட்டுமான பணிகளை சி.பி.ஐ. கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது. ஏனென்றால் இதுபோல பல்வேறு மருத்துவமனைகளை எய்ம்ஸ் நிர்வாகம் கட்டியுள்ளதால் தொடர் கண்காணிப்புகள் அவசியம் இல்லை என்று இந்த கோர்ட்டு கருதுகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பணியில் 35 சதவீத இட ஒதுக்கீடு என்பது எதன் அடிப்படையில் வழங்க வேண்டும் என்பதற்கான முறையான தகவல்களை மனுதாரர் தெரிவிக்கவில்லை. இது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. அதில் கோர்ட்டு தலையிட முடியாது. எனவே இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்" என்று கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.