ராணுவ ஹெலிகாப்டர் விவகாரம்: மத்திய மந்திரியை ராஜினாமா செய்ய சொல்வதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை கரு.நாகராஜன் பேட்டி
ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில் மத்திய மந்திரி நிர்மலாதேவி மற்றும் துணை முதல்–அமைச்சர் பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய சொல்வதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று பா.ஜ.க. மாநில செயலாளர் கரு.நாகராஜன் கூறினார
சங்கரன்கோவில்,
ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில் மத்திய மந்திரி நிர்மலாதேவி மற்றும் துணை முதல்–அமைச்சர் பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய சொல்வதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று பா.ஜ.க. மாநில செயலாளர் கரு.நாகராஜன் கூறினார்.
நிர்வாகிகள் கூட்டம்சங்கரன்கோவிலில் பா.ஜ.க. சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநில செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் எம்.பி. நரசிம்மன் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது மாநில செயலாளர் கரு.நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தியது சம்பந்தமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் ராஜினாமா செய்ய சொல்வதற்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும், ஜல்லிகட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போதும், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோதும், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் தான் நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது எல்லாம் பேசாமல் இருந்துவிட்டு இன்று ஸ்டாலின், பா.ஜ.க.வை குறை சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது போது, அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பா.ஜ.க. 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளது.
வாக்கு வங்கிவெற்றி, தோல்வி என்பது அரசியலில் நிரந்தரம் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வை வலிமையாக மாற்ற தமிழகம் முழுவதும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வீட்டு வரியை 100 சதவீதம் உயர்த்தியதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அப்போது முடிவு செய்யப்படும்.
இவ்வாறு கரு.நாகராஜன் கூறினார்.
அப்போது கட்சி நிர்வாகிகள் குமரேச சீனிவாசன், அன்புராஜ், வெங்கடேஸ்வரபெருமாள், சுப்பிரமணியன், பாலகுருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.