இன்று தொடங்குகிறது குற்றாலத்தில் சாரல் திருவிழா


இன்று தொடங்குகிறது குற்றாலத்தில் சாரல் திருவிழா
x
தினத்தந்தி 27 July 2018 9:45 PM GMT (Updated: 27 July 2018 12:40 PM GMT)

குற்றாலத்தில் சாரல் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

தென்காசி, 

குற்றாலத்தில் சாரல் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

சாரல் திருவிழா

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்கள் ஆகும். இந்த ஆண்டு சீசன் கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. தற்போது சீசன் நன்றாக உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான விழா இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் தொடங்குகிறது. விழாவுக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்குகிறார். எம்.பி.க்கள் பிரபாகரன், வசந்தி முருகேசன், செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாவட்ட கலெக்டர் ஷில்பா வரவேற்று பேசுகிறார்.

அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சாரல் விழாவை தொடங்கி வைக்கிறார். சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார். சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா, சுற்றுலா ஆணையாளர் பழனிகுமார் ஆகியோர் பேசுகிறார்கள்.

விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) தோட்டக்கலை கண்காட்சி தொடங்குகிறது. மதியம் நாய்கள் கண்காட்சி நடக்கிறது. 30–ந்தேதி காலையில் படகு போட்டியும், மாலையில் யோகா நிகழ்ச்சியும் நடக்கிறது.

மினி மாரத்தான் போட்டி

31–ந்தேதி சுற்றுச்சூழல் குறித்த ஓவியப்போட்டியும், ஆகஸ்டு 1–ந்தேதி நீச்சல், வில்வித்தை போட்டியும், 2–ந்தேதி கோலப்போட்டி, கொழு கொழு குழந்தைகள் போட்டியும், 3–ந்தேதி ஆணழகன் போட்டியும், 4–ந்தேதி மினி மாரத்தான் போட்டியும் நடைபெறுகின்றன.

விழா நாட்களில் இரவில் பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட நிர்வாகமும், குற்றாலம் நகர பஞ்சாயத்து நிர்வாகமும் செய்து வருகின்றன


Next Story