மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை


மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 28 July 2018 10:45 PM GMT (Updated: 28 July 2018 8:44 PM GMT)

மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

குளித்தலை,

மேட்டுமகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 19-ந் தேதி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்யும் வைபவம் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டு இக்கோவிலில் ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 4-ந் தேதி தேங்காய் உடைக்கும் வைபவமும் நடைபெறவுள்ளது. இத்திருவிழா தொடர்பாக குளித்தலை கோட்டாட்சியர் லியாகத் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற 4-ந் தேதி காலை 9 மணிக்கு தேங்காய் உடைக்கும் வைபவம் தொடங்கப்படும்.

தேங்காய் தலையில் வைத்து எடுத்து தரையில் உடைக்கப்படவேண்டும். தேங்காய் உடைத்துக்கொள்ள வரும் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி அறநிலையத்துறை ஏற்படுத்தித்தர வேண்டும். தீர்த்தவாரி நடைபெறும் 3-ந் தேதி, தேங்காய் உடைக்கும் வைபவம் நடைபெறும் 4-ந் தேதி காவல்துறை கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். கோவில் வளாகத்திற்குள் குறிப்பிட்ட சமூகத்தினர் சார்பில் பேனர்கள், ஒலிபெருக்கிகள் கட்டி விளம்பரம் செய்தல், பொது இடங்களில் விளம்பர தட்டிகள் வைக்கக்கூடாது. ஒவ்வொரு இனத்தவரும் கோவிலில் செய்ய உள்ள நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே அறநிலையத்துறை அதிகாரிக்கு எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

கோவில் சுற்றுச்சுவருக்குள் தங்கள் இனப்பெயர்களை தெரிவித்து வரிவசூல் செய்யக்கூடாது. திருவிழாவின் போது கோவில் வளாகத்திற்குள் வான வெடிகளை கண்டிப்பாக உபயோகிக்கக்கூடாது. தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் இடத்தில் செல்போன் கொண்டுவரவோ, அதன்மூலம் படம் எடுக்கவோ அனுமதிக்கப் படகூடாது. கடந்த ஆண்டை போலவே திருவிழாவை சிறப்பாக, அமைதியாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு இடமின்றி நடத்துவது என்பன போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை, காவல், தீயணைப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story