மாவட்ட செய்திகள்

ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் + "||" + Complaint of several lakh rupees fraud In panchayats

ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார்

ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார்
திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனையடுத்து நிதி பரிமாற்றம் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை,தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் அதன் நிர்வாக பொறுப்புகளை தனி அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர். இதில் குறிப்பாக கிராம ஊராட்சிகளின் ஒட்டுமொத்த நிதி அதிகாரமும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சிகளில் அரசு வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தெருவிளக்குகள் மாற்றம், மின் மோட்டார் சீரமைப்பு, ஆழ்துளை கிணறு பராமரிப்பு, கால்வாய் சீரமைப்பு போன்ற பணிகளை செய்ததாக போலி ரசீதுகள் தயாரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்து உள்ளன.

இதுகுறித்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்தனிடம் கேட்டபோது, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 69 ஊராட்சிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்து உள்ளன. இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) முதல் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இந்த ஊராட்சிகளின் கணக்கில் இருந்து நிதி பரிமாற்றம் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகியிடம் கேட்டபோது, ‘திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் நிதி அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்தது. வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கருணாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். ஒரு அலுவலர் ஓய்வு பெற்றுவிட்டால் மற்றொரு அலுவலர் பொறுப்பேற்கும் வரை நிதி பரிமாற்றம் செய்வது நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, தற்போது நிதி பரிமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் நிதி ஆதாரம் குறைவு தான். அதனால் அங்கு மோசடி ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.