தனியார் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கட்டணத்தை திரும்ப கேட்டு பயணிகள் கோஷமிட்டதால் பரபரப்பு


தனியார் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கட்டணத்தை திரும்ப கேட்டு பயணிகள் கோஷமிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Aug 2018 4:30 AM IST (Updated: 6 Aug 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த தனியார் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் தங்களுடைய பயண கட்டணத்தை திரும்ப கேட்டு பயணிகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து தினமும் நள்ளிரவு 12.50 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஒரு தனியார் விமானம் இயக்கப்படுகிறது. நேற்று நள்ளிரவு அந்த விமானம் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 132 பயணிகள் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அந்த விமானம் புறப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி, விமான நிலையத்திற்கு வந்தனர். அதில் சிலர் தங்களது வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

ஆனால் பெரும்பாலான பயணிகள், விமான நிலையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவன அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த அதிகாரிகளிடம், எப்போது விமானம் புறப்படும் என்பது தெரியாததால், தங்களுடைய பயண கட்டணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். அதற்கு தனியார் விமான நிறுவன அதிகாரிகள், பயணிகளை ஓட்டலில் தங்க வைப்பதாக, கூறினர். அதை பயணிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் அவர்கள், தனியார் விமான நிறுவன அலுவலகத்தின் முன்பு நின்று, தங்களுடைய பயண கட்டணத்தை திருப்பி தரக்கோரி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தனியார் விமான நிறுவன அதிகாரிகள், விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

Next Story