கீழ்வேளூரில் தேவநதி வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்


கீழ்வேளூரில் தேவநதி வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:45 PM GMT (Updated: 6 Aug 2018 8:53 PM GMT)

கீழ்வேளூரில் வேதநதி வாய்க்காலை சொந்த செலவில் விவசாயிகள் தூர்வாரி வருகின்றனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு பாண்டவைஆறு, ஓடம் போக்கி ஆறு, கடுவையாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் வழியாக பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கின்றன. இந்த நிலையில் வெட்டாற்று கிளை பாசன வாய்க்காலான தேவநதி வாய்க்கால் மூலம் பெருங்கடம்பனூர், செல்லூர், பாலையூர், பாலக்காடு, வைரவன் இருப்பு, மேல நாகூர், நாகூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தேவநதி வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இதனால் தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை மூலம் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு வந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும் தேவ நதி வாய்க்கால் தூர் வாரப்படாத காரணத்தால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதை கண்டித்து சில நாட்களுக்கு இப்பகுதி விவசாயிகள் வயலில் இறங்கி தீப்பந்தம் ஏந்தி விடிய,விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து தேவநதி வாய்க்காலை தூர்வார முடிவு செய்தனர். இதற்காக விவசாயிகள் பணம் வசூல் செய்து எந்திரம் மூலம் தேவநதி வாய்க்காலில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்திடம் தேவநதி வாய்க்காலை தூர்வார கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியின்றி கடன் வாங்கி வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இதன் மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தூர்வாரும் பணிக்கு ஆகும் செலவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசிடம் இருந்து பெற்று தரவேண்டும் என்றனர். 

Next Story