ரெங்கமலை பகுதியில் 2 குட்டி விமானங்கள் பறந்ததால் பரபரப்பு
வேடசந்தூர் அருகே ரெங்கமலை பகுதியில் 2 குட்டி விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர்,
வேடசந்தூரை அடுத்த தேவிநாயக்கன்பட்டி அருகே உள்ள கருமலை, ரெங்கமலை பகுதியில் பூமிக்கடியில் உள்ள பாறைகளில் தங்கம், செம்பு, காப்பர், துத்தநாகம், காரியம் உள்ளிட்ட 7 வகையான கனிம வளங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய நில அறிவியல் துறை அதிகாரிகள் 2 குழுக்களாக முகாமிட்டு கடந்த மார்ச் மாதம் ஆய்வு நடத்தினர்.
இதற்காக கருமலை முதல் ரெங்கமலை வரை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலையை சுற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் 2 மலைகளுக்கும் இடையே பட்டா நிலங்களில் பாறை ஓட்டத்தின் அடையாளத்தை குறிக்கும் வகையில் 500 மீட்டருக்கு ஒரு அடையாள கல் ஊன்றினர்.
இதைத்தொடர்ந்து கல் ஊன்றப்பட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வு நடத்த போவதாக தகவல் பரவியது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து ஆய்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மலைப்பகுதியில் உள்ள கற்களை மட்டும் அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். அதன்பிறகு ஆய்வு நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் அடிக்கடி ரெங்கமலை, கருமலையை சுற்றி குட்டி விமானங்கள் பறப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணி அளவில் 2 குட்டி விமானங்கள் அடுத்தடுத்து ரெங்கமலையை சுற்றி தாழ்வாக பறந்துள்ளன.
ஒன்றன் பின் ஒன்றாக பயங்கர சத்தத்துடன் அப்பகுதியில் குட்டி விமானங்கள் வட்டமிட்டதால் அந்த வழியாக சென்றவர்கள், விவசாயிகள் அதனை பார்த்தனர். அடுத்தடுத்து வரிசையாக 2 குட்டி விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்ததால் இந்திய நில அறிவியல் துறையினர் மீண்டும் கனிம வள ஆய்வை தொடங்கிவிட்டதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனவே ரெங்கமலை மற்றும் கருமலைப்பகுதியில் குட்டி விமானங்கள் பறப்பதற்கான காரணம் குறித்து திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தி அச்சத்தை போக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story