போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை
நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.
வேலை நிறுத்தம்அனைத்து சாலை போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜி.எஸ்.டி. வரியுடன் இணைக்க வேண்டும், சுங்கச்சாவடி வசூலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் நெல்லையில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு, தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் டவுன் பஸ்களும், புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறநகர் பஸ்களும் வழக்கம் போல் புறப்பட்டு சென்றன. பயணிகள் கூட்டம் வழக்கம் போல் காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
ஆர்ப்பாட்டம்இதையொட்டி நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், ஏ.ஐ.டி.யு.சி. ராதாகிருஷ்ணன், எச்.எம்.எஸ். சுப்பிரமணியன், சந்தானம், கணேசன், ஓட்டுனர் பயிற்சி சங்க மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ், நயினா முகமது உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளும் நேற்று மூடப்பட்டன. இதனால் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்த பணியாளர்கள் செல்லவில்லை. கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை ஓட்டுவதற்கான உரிமம் எடுக்கவும் யாரையும் அழைத்து செல்லவில்லை. இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதற்கிடையே வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தமிழக போக்குவரத்து பணியாளர்கள் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொருளாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை– சங்கரன்கோவில்திசையன்விளை காமராஜர் பஸ்நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் மரியஜான் ரோஸ் தலைமை தாங்கினார். சங்க பொதுச் செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சங்கரன்கோவில் தேரடி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் ஸ்டாலின், நெல்சன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல் அம்பை, செங்கோட்டை ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.