போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: மாவட்டத்தில் கார், வேன்கள் ஓடவில்லை


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: மாவட்டத்தில் கார், வேன்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 8 Aug 2018 3:15 AM IST (Updated: 8 Aug 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் குறைந்தளவே ஓடின. கார், வேன்கள் ஓடவில்லை.

விழுப்புரம், 



மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், சுங்க கட்டணத்தை கைவிட வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் சி.ஐ.டி.யு., தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., அறிவர் அம்பேத்கர் தொழிற்சங்கம், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இருந்தபோதிலும் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு சென்றனர். இதனால் அரசு பஸ்கள் அனைத்தும் வழக்கம்போல் ஓடின.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பஸ்கள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. இருந்தபோதிலும் பஸ்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இதனால் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் நேற்று வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.
இதேபோல் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் தனியார் பஸ்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைந்த எண்ணிக்கையிலேயே ஓடின. விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு தனியார் பஸ்கள் முழுவதுமாக ஓடவில்லை. இதனால் புதுச்சேரி செல்லக்கூடிய தனியார் பஸ்கள், பஸ் நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.


மேலும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாடகை கார், வேன் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை இயக்கவில்லை. இதனால் கார்கள், வேன்கள் அனைத்தும் அந்தந்த நிறுத்தங்களிலும் மற்றும் லாரிகள் மாநில, தேசிய நெடுஞ்சாலையோரங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், டெம்போக்கள் ஆகியவை குறைந்த எண்ணிக்கையில் ஓடின. இதனால் இந்த வேலை நிறுத்தத்தினால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 

Next Story