தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: நெல்லை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு– பஸ்கள் ஓடவில்லை


தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: நெல்லை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு– பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 8 Aug 2018 10:30 PM GMT (Updated: 8 Aug 2018 12:51 PM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நெல்லை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை

நெல்லை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நெல்லை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை.

செங்கோட்டை– தென்காசி

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை. செங்கோட்டையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. இதனால் பஸ்நிலையம் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. நகரின் முக்கிய இடங்களில் தி.மு.க.வினர் கருணாநிதி படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் நகர் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பின்னர் மாலையில் மவுன ஊர்வலம் நடந்தது.

தென்காசி கூளக்கடை பஜாரில் நகர தி.மு.க சார்பில் கருணாநிதி உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நகர பொருளாளர் ஷேக் பரீத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பால்ராஜ், மோகன்ராஜ், ஆறுமுகம், பரமசிவன், நாகூர் மீரான் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதே போல் பல்வேறு இடங்களில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பாவூர்சத்திரம்– மானூர்

பாவூர்சத்திரத்தில் தி.மு.க.வினர் சார்பில் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி பிரமுகர்கள் 11 பேர் மொட்டையடித்துக் கொண்டனர். தொடர்ந்து பாவூர்சத்திரம் காமராஜர் சிலை முன்பிருந்து மவுன ஊர்வலம் நடந்தது. வணிகர் சங்க தலைவர் காளிதாசன், யூனியன் முன்னாள் தலைவர் காமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பாவூர்சத்திரத்தில் கடைகள், ஓட்டு தொழிற்சாலைகள், மர அறுவை ஆலைகள், அரிசி ஆலைகள், ஜவுளிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

மானூரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு ம.தி.மு.க. மாநில செய்தி தொடர்பாளர் மின்னல் அலி, காங்கிரஸ் வட்டார தலைவர் ஏசுராஜன், தி.மு.க. ஊராட்சி செயலாளர் அசோக் உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இட்டமொழி–பேட்டை

இட்டமொழி பஸ்நிலையம் முன்பு கருணாநிதி படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நாங்குநேரி ஒன்றிய கலைஞர் பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி லிங்கேசன் மற்றும் பலர் மரியாதை செலுத்தினார்கள். பரப்பாடியில் தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள காடன்குளத்திலும் கருணாநிதி படத்துக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினார்கள்.

பேட்டையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. பேட்டை மீனாட்சி திரையரங்கம் அருகில் வியாபாரிகள் சங்க தலைவர் சுல்தான் அலாவுதீன் தலைமையில் புறப்பட்ட இந்த ஊர்வலம் ஆஸ்பத்திரி, போலீஸ் நிலையம், ரொட்டிக்கடை வழியாக செக்கடியை வந்தடைந்தது. அங்கு 2 நிமிடம் அனைவரும் அமைதியாக நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். ஊர்வலத்தில் அனைவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

20 பேர் மொட்டையடித்தனர்

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளத்தில் கிளை செயலாளர் முருகையா தலைமையில் தி.மு.க. தொண்டர்கள் 2 பேரும், சாயமலை மடத்துப்பட்டியில் 18 பேரும் மொட்டை அடித்துக் கொண்டனர். முன்னதாக அவர்கள் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story