மாவட்ட செய்திகள்

கருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி + "||" + Karunanidhi cavilion in DMK district in Perambalur district, civic people

கருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி

கருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி
கருணாநிதி மறைவையொட்டி, அவரது உருவப்படத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர், பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
பெரம்பலூர்,

தி.மு.க.வின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். கருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கின. மேலும் அவர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். கருணாநிதி மறைவையொட்டி நேற்று அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதோடு மட்டுமின்றி தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டன. தி.மு.க. கட்சி கொடிகளும் கருணாநிதி மறைவையொட்டி அரை கம்பத்தில் பறந்தன. கருணாநிதி உயிரிழந்ததை தொடர்ந்து பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதலே தொண்டர்கள் குவிந்தனர். அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிரிழந்ததை தாங்கி கொள்ள முடியாமல் அங்கிருந்த தொண்டர்கள், மகளிரணியை சேர்ந்த தொண்டர்கள் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. தி.மு.க.வின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டன.

பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் ஒரு சிறுமி கருணாநிதியின் உருவப்படத்திற்கு பாசத்துடன் முத்தம் கொடுத்து மரியாதை செலுத்தியதை காண முடிந்தது. பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதி உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கட்சி பாகுபாடின்றி பொதுமக்களும் தங்களது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்ட தலைமை அனைத்து நடிகர் ரசிகர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரசிகர்கள் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை, புதிய பஸ் நிலையம் வழியாக மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு வந்தன. அங்கு நகர தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு ரசிகர்கள், தி.மு.க. தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியர்கள் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.

இதேபோல் தி.மு.க.வின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். இதில் கட்சியின் மாநில செயலாளர் செங்கோலன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விளம்பர பதாகைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய தாலுகாவில் உள்ள கிராமங்களிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.