ஈரோட்டில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல், 3 பேர் கைது
ஈரோட்டில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 53). இவர் திருவேங்கடசாமி வீதியில் சொந்தமாக ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மைத்துனரான நீதிமோகன் என்பவரும், நாடார்மேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரும் இணைந்து கனிமார்க்கெட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். இதில் நீதிமோகனுக்கும், சக்திவேலுக்கும் இடையே வியாபார ரீதியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து திருநாவுக்கரசு அவர்கள் 2 பேருக்கும் இடையே சமரசம் செய்து வைத்தார். அதன்பிறகு திருநாவுக்கரசு மீது சக்திவேல் கோபத்தில் இருந்து வந்து உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல், இவருடைய நண்பர்களான கள்ளுக்கடைமேடு பகுதியை சேர்ந்த காதர் ஷெரீப், முஸ்தபா ஆகியோர் மூலப்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கு சென்றனர். அங்கு திருநாவுக்கரசிடம் சக்திவேல், ‘உன்னால்தான் எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதும் எனவும், அதற்காக ரூ.2 லட்சம் தர வேண்டும்’ என்றும் கேட்டதாக தெரிகிறது. மேலும், சக்திவேலுடன் சென்றவர்கள் திருநாவுக்கரசு கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசின் குடும்பத்தினர் சத்தம் போட்டனர். இதனால் சக்திவேல், காதர்ஷெரீப், முஸ்தபா ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.
இதுகுறித்து திருநாவுக்கரசு ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், காதர்ஷெரீப், முஸ்தபா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.