ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க பா.ஜனதா முடிவு


ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க பா.ஜனதா முடிவு
x
தினத்தந்தி 11 Aug 2018 11:17 PM GMT (Updated: 11 Aug 2018 11:17 PM GMT)

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க பா.ஜனதா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 20 இடங்களில் வெற்றி பெற பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடக தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக இப்போதில் இருந்தே மாநில தலைவர் எடியூரப்பா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். இதற்கிடையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தென் இந்தியாவில் அதிக இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற அமித்ஷா பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகவும், இதற்காக பெங்களூருவில் தனி அலுவலகம் திறக்க அவர் தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 13 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற தகவல் அமித்ஷாவுக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆட்சியை பிடிக்க கர்நாடக தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க பா.ஜனதாவினர் முடிவு செய்திருப்பதாகவும், மந்திரி பதவி கிடைக்காமலும், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story