மேட்டூர் அணையில் கலெக்டர் ரோகிணி ஆய்வு காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்


மேட்டூர் அணையில் கலெக்டர் ரோகிணி ஆய்வு காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 Aug 2018 11:31 PM GMT (Updated: 11 Aug 2018 11:31 PM GMT)

மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து கலெக்டர் ரோகிணி நேற்று அணையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது காவிரி கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேட்டூர்,

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியதை அடுத்து, சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று மாலை மேட்டூருக்கு வந்தார். அங்கு அவர் அணையை பார்வையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

அப்போது அணைக்கு நீர்வரத்து மற்றும் தண்ணீர் திறப்பு குறித்த விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்து ஆலோசித்தார். தொடர்ந்து அணையின் 16 கண் பாலம் பகுதியில் இருந்து அணையை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றங்கரைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வருவாய்த்துறை சார்பில், காவிரி கரையை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறும் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். காவிரி ஆற்றங்கரைகளில் தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காவிரி கரை பகுதிகளில் தடுப்புகள் (பேரிகார்டுகள்) அமைக்கப்பட்டு பொதுமக்கள் யாரும், காவிரி ஆற்றுக்குள் இறங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

உபரிநீர் திறப்பு காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரையோர மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ அல்லது கரையோரத்தில் நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களிலோ ஈடுபட வேண்டாம். மேலும் வருவாய்த்துறை சார்பில் கரையோர கிராமங்களில் தண்டோரா அறிவிப்பு செய்யப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மேட்டூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) ராமதுரைமுருகன், மேட்டூர் தாசில்தார் அறிவுடைநம்பி, பொதுப்பணித்துறை மேட்டூர் நிர்வாக பொறியாளர் தேவராஜன், அணை பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story