ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்: தந்தை-மகள் படுகாயம்
கோவில்பட்டியில் ஆட்டோ மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தையும், மகளும் படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே முடுக்கலாங்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (37). இவர்களுக்கு மணிமேகலை (16), ராஜலட்சுமி (14) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் முருகன் மோட்டார் சைக்கிளில் தன்னுடைய மனைவி, மகள்களுடன் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
கோவில்பட்டி சண்முகசிகாமணி நகர் விலக்கு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக சென்ற ஆட்டோ திடீரென்று மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் முருகன், மணிமேகலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். செல்வி, ராஜலட்சுமி ஆகியோர் காயமின்றி தப்பினர்.
படுகாயம் அடைந்த முருகன், மணிமேகலை ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் முருகனை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story