நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்து நாசம் கணவன், மனைவி உள்பட 4 பேர் உயிர் தப்பினர்


நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்து நாசம் கணவன், மனைவி உள்பட 4 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 14 Aug 2018 4:30 AM IST (Updated: 14 Aug 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

கீரம்பூர் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக கணவன், மனைவி உள்பட 4 பேர் உயிர் தப்பினர்.

பரமத்தி வேலூர்,

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). இவரது மனைவி மணிமேகலை (53), உறவினர் செல்வம் (55). இவர்கள் 3 பேரும் சேலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் நாமக்கல் வழியாக கரூரில் உள்ள தங்களது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். காரை டிரைவர் சையத்காதர் (48) ஓட்டி வந்தார்.

அப்போது நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் வந்தபோது கார் திடீரென தீப்பற்றியது. இதை அறிந்த டிரைவர் காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினார்.

காரில் இருந்த கந்தசாமி, அவரது மனைவி மணி மேகலை, உறவினர் செல்வம், டிரைவர் ஆகிய 4 பேரும் காரில் இருந்து உடனடியாக வெளியேறினர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தாலும் தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமாகி எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story