நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் திருச்சிக்கு வெள்ள அபாயம் நீங்கியது


நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் திருச்சிக்கு வெள்ள அபாயம் நீங்கியது
x
தினத்தந்தி 20 Aug 2018 11:00 PM GMT (Updated: 20 Aug 2018 7:00 PM GMT)

நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் திருச்சிக்கு வெள்ள அபாயம் நீங்கியது. கொள்ளிடம் இரும்பு பாலத்தில் மேலும் ஒரு தூண் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருச்சி,

கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இந்த ஆண்டு மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிறைந்து வரலாற்றில் இடம் பிடித்தது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருந்ததால் கடந்த வாரம் முழுவதும் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்த பலத்த மழையினால் பவானி, அமராவதி அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் காவிரி ஆற்றில் கலந்ததால் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தது.

இந்த தண்ணீர் அப்படியே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்பட்டது. காவிரியில் அதிகபட்சமாக வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியும், கொள்ளிடத்தில் அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் தண்ணீர் அதன் கரைகளை தொட்டபடி சென்றன. இதனால் கரையோர பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையின் அனைத்து படிக்கட்டுகளும் நீரில் மூழ்கியதால் அம்மா மண்டபத்தில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. இரும்பு குழாய்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அம்மா மண்டபம் படித்துறையில் இருந்த புரோகிதர்களும் வெளியேற்றப்பட்டனர். அம்மா மண்டபம் சாலையில் உள்ள கருட மண்டபம் படித்துறையும் மூடப்பட்டு உள்ளது. இந்த படித்துறையை தாண்டிய தண்ணீர் அதன் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலை சூழ்ந்து உள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிகவும் பழமையான இரும்பு பாலத்தின் 18-வது தூணில் கடந்த புதன்கிழமை இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி தூண் ஆற்றுக்குள் இறங்கியபடியே சென்றது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 18-வது தூணும், அதன் அருகில் இருந்த 19-வது தூணும் முற்றிலுமாக ஆற்றுக்குள் இறங்கியதால் பாலத்தின் அந்த பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது.

இடிபாடுகள் மற்றும் இரும்பு பாளங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இடிந்த பாலத்தை பார்ப்பதற்காக கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் புதிதாக கட்டப்பட்ட கொள்ளிடம் பாலத்தில் கூடினார்கள். இதனால் அந்த பாலம் சுற்றுலா தலம் போல் மாறியது.

இந்நிலையில் கொள்ளிடம் இரும்பு பாலத்தில் மேலும் ஒரு தூண் (20-வது எண்) ஆற்றுக்குள் சரிந்து கொண்டே செல்கிறது. இதனால் இந்த தூணும் ஆற்றுக்குள் முழுமையாக இறங்கும் பட்சத்தில் பாலத்தின் அந்த பகுதியும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது.

பாலத்தின் இந்த பகுதியை நேற்றும் ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து விட்டு சென்றனர். இடிந்து விழுந்த பாலத்தின் அருகில் சென்று கொண்டிருந்த மின்கம்பிகள் ஏற்கனவே துண்டிக்கப்பட்டு விட்டன. ஆனாலும் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் பொதுமக்களை மிரட்டிய படி உள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 72 ஆயிரம் கன அடியாக இருந்தது. முக்கொம்பில் இருந்து காவிரியில் வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கொள்ளிடத்தில் வினாடிக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ள அபாயம் நீங்கி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இரு ஆறுகளிலும் தண்ணீர் தொடர்ந்து பெருக்கெடுத்து செல்வதால் பொதுமக்களிடம் வெள்ளம் தொடர்பான அச்சம் இன்னும் நீங்கவில்லை. 

Next Story