செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்: 2–ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது


செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்: 2–ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது
x
தினத்தந்தி 28 Aug 2018 10:30 PM GMT (Updated: 28 Aug 2018 8:16 PM GMT)

செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி 2–ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காவிரியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் முன்பு வைக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்து, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுடன், புனித நீர் குடங்களை பக்தர்கள் தண்டாயுதபாணி மலைக்கோவிலுக்கு கொண்டு வந்தனர்.


இதை தொடர்ந்து சுவாமிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், அஸ்த்ர ஹோமம், நவகிரக ஹோமம், கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, கோ பூஜை, கஜ பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு எஜமான் அனுமதி பெறுதல், ஆச்சாரியார் அழைப்பு பூர்வாங்க பூஜை, மிருத்சங்கிரஹனம், அங்குரார்பனம் ஆகியவை நடைபெற்று முதல் கால யாக சாலை பூஜைகள் நடை பெற்றது. நேற்று காலை 8 மணிக்கு 2–ம் கால யாக சாலை பூஜையும், மாலை 6 மணிக்கு 3–ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு 4–ம் கால யாக சாலை பூஜையும், 4.30 மணிக்கு 5–ம் கால யாக சாலை பூஜையும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு 6–ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், திரவியாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9.45 கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 10.15 மணிக்கு ராஜகோபுரம் விமான கலசம், மூலவர் விமான கலசம், பரிவார விமான கலசம் உள்ளிட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசு போக்குவரத்து சார்பில் பெரம்பலூர், துறையூர், ஆலத்தூர் கேட், பாடாலூர் ஆகிய பகுதியில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜு, தக்கார் பாரதிராஜா, கந்த சஷ்டி கமிட்டியினர், கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story