நாகையில் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் பொதுமக்கள் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு


நாகையில் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் பொதுமக்கள் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 31 Aug 2018 4:30 AM IST (Updated: 30 Aug 2018 10:46 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை பொதுமக்கள் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகையில் ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்தும், காரைக்காலில் இருந்தும் தினமும் தஞ்சை வழியாக திருச்சிக்கு பயணிகள் ரெயில்களும், திருச்சியில் இருந்து நாகைக்கு பயணிகள் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. மேலும் நாகை வழியாக பெங்களூரு, திருச்சியில் இருந்து காரைக்காலுக்கும், சென்னைக்கும் விரைவு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளிட்ட மூம்மத ஆன்மிக தலங்கள் உள்ளன. இதனால் பல்வேறு ஊர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிக அளவில் நாகைக்கு ரெயில்கள் மூலம் வருகின்றனர்.

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவா, மும்பை ஆகிய மாநிலங்களில் இருந்து நாகை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த விழாவுக்காக கோவா, மும்பை, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ரெயில்கள் மூலம் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.


இந்த நிலையில் நேற்று காலை ஆரியநாட்டு தெரு ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து ரெயில்வே கேட் கீப்பரிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

உடனே நாகையில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். இதனால் அந்த வழியாக காலை 9.15 மணிக்கு செல்ல இருந்த சரக்கு ரெயில் வெளிப்பாளையம் ரெயில்நிலையம் அருகே சுமார் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்ட பிறகு அங்கு இருந்து சரக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story