செயல்படாத அரசால் தான் தமிழகம் இருண்டு கிடக்கிறது - ஜி.கே.வாசன்
செயல்படாத அரசால் தான் தமிழகம் இருண்டு கிடக்கிறது என்று வேப்பூரில் நடந்த விழாவில் ஜி.கே. வாசன் பேசினார்.
விருத்தாசலம்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நேற்று கடலூர் மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தார். அப்போது, விருத்தாசலம் மணவாளநல்லூரில் நடந்த கட்சியின் கொடியேற்று விழாவில் அவர் கலந்து கொண்டு, கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியோடு பஸ், ரெயில்களில் பயணம் செய்து மக்களை அச்சுறுத்துவதை ஏற்க முடியாது.
காவிரியில் கடை பகுதிகளுக்கு இதுவரைக்கும் தண்ணீர் போய் சேரவில்லை. இதற்கு பொதுப்பணித்துறையின் முறையற்ற பணிதான் காரணமாகும். கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரக்கூடிய பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் மணல் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னை மாநகராட்சியில் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருப்பது, ஆட்சியாளர்களின் செயல்பாட்டை பிரதிபலிக்கிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் நிலை என்ன, இந்த ஆட்சியின் நிலை என்ன என்று மக்களின் சந்தேகம் வலுத்து கொண்டே செல்கிறது. நீதிமன்றத்தை பொறுத்தவரையில் ஒரு காலகெடுவிற்குள் முடிவு தெரிய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அவ்வாறு இல்லாமல் இருப்பது மக்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.
நெய்வேலி என்.எல்.சி.யில் ஆண்டுக்கு 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வதுடன், அவர்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற மத்திய அரசும், என்.எல்.சி.யும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வட்டார தலைவர் ராமராஜன், நகர தலைவர் அசோக்குமார், பெருமாள், கருணாமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ புரட்சிமணி, கந்தசாமி, பழனி, மணிகண்டன், முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, வேப்பூர் கூட்டுரோட்டில் கட்சி கொடியை ஏற்றி வைத்து, ஜி.கே. வாசன் பேசினார். அப்போது அவர் பேசுகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்படாத அரசுகளாக உள்ளது. எனவே தான் தமிழகம் இருண்டு கிடக்கிறது. வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் என்று பேசினார்.