மாவட்ட செய்திகள்

எந்த தேர்தலையும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி + "||" + The AIADMK is ready to meet any election

எந்த தேர்தலையும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

எந்த தேர்தலையும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி என எந்த தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர்,

அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி விருதுநகர் மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியின் இறுதி நாளான நேற்று திருத்தங்கலில் இருந்து விருதுநகருக்கு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கிவைத்து பேரணி சென்றார். இதனைத்தொடர்ந்து கட்சியினர் சைக்கிள் பேரணியாக சென்றனர்.

விருதுநகரில் நடந்த சைக்கிள் பேரணியின்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–

அமைச்சர்கள் மீதும் ஆட்சியில் இருப்பவர்கள் மீதும் புகார் கூறப்படுவதும், குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவதும் வாடிக்கை தான். ஆனால் நீதிமன்றம் புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் விசாரித்து குற்றவாளி என கூறவேண்டும். அவ்வாறு இல்லாத வகையில் அதுகுறித்து பொருட்படுத்த வேண்டியதில்லை.

டி.டி.வி.தினகரன் நாங்கள் நடத்தும் சைக்கிள் பேரணி குறித்து புகார் கூறுகிறார். அவரால் சைக்கிள் பேரணி நடத்த முடியுமா. அவரிடம் ஆள் இல்லை. எனவேதான் மக்களை சந்திக்கும் இந்த சைக்கிள் பேரணியை பற்றி அவர் தேவையில்லாமல் புகார் கூறுகிறார்.

தமிழகத்தில் கோவில்களில் தவறு நடப்பதாக புகார் கூறப்பட்டாலும் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் இருக்கும் நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறு தவறுகள் நடந்தாலும் அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தான் ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. கோவில் சிலைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிதாக கட்சிகள் தொடங்குபவர்களும் அமைப்புகளை ஏற்படுத்துபவர்களும் அ.தி.மு.க அரசை குறை கூறுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அவர்கள் நோக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் இருப்பதால் தான் குறை கூறுகிறார்கள். பாராளுமன்ற தேர்தலானாலும், சட்டமன்ற தேர்தலானாலும், உள்ளாட்சி தேர்தலானாலும் எந்த தேர்தலையும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. அனைத்து தேர்தல்களிலும் மக்கள் ஆதரவுடன் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சைக்கிள் பேரணி மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து வருகிறோம். அவர்கள் மத்தியில் அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை உணர முடிகிறது. அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து திட்டங்களையும் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி வைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் சைக்கிள் பேரணிக்கு பெரும் வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.