ரூ.1½ லட்சம் போதை பொருட்கள் கடத்தல் கார் பறிமுதல்; 2 பேர் கைது


ரூ.1½ லட்சம் போதை பொருட்கள் கடத்தல் கார் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2018 4:15 AM IST (Updated: 5 Sept 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1½ லட்சம் மதிப்புடைய போதை பொருட்களை கடத்தி வந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதை போலீசார் வழிமறித்து, நிறுத்த முயன்றனர். ஆனால் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மற்றொரு வாகனத்தில் அந்த காரை விரட்டி சென்று வழிமறித்து, அதில் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து போலீசார் காரை சோதனையிட்டனர். இதில் காரில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், காரையும், அதில் வந்தவர்களையும் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பகவதிசரணம் ஆகியோர் காரில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த ஜவான்ராம்ஜி மகன் ஜித்துபடேல் (வயது21), தாமோந்திரசிங் மகன் நரசிங்கா(34) ஆகியோர் என்பதும், இவர்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி வந்து, தஞ்சையில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய போதை பொருட்களையும், அவற்றை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜித்துபடேல், நரசிங்கா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story