கிருஷ்ணகிரி: வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை


கிருஷ்ணகிரி: வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 7 Sep 2018 11:15 PM GMT (Updated: 2018-09-08T01:55:48+05:30)

வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் ஒருவர் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் கோவிந்தசாமி (வயது 28) என்ஜினீயர். படித்து முடித்து பல வருடங்களாகியும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. சென்னை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு வேலை தேடி சென்றும் தகுதியான வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டார்.

அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. போனும் பேசவில்லை. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பக்கிரிதக்கா எனும் இடத்தில் ஒருவர் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அருகில் விஷ பாட்டிலும் கிடந்தது. அருகில் ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

“வேலைகிடைக்காத விரக்தியில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இதனால் எனது குடும்பத்தை விட்டு பிரிகிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இந்த தகவலை இதில் குறிப்பிட்டுள்ள போன் மூலம் உரியவர்களுக்கு தெரிவித்து விடவும்” என உருக்கமான தகவல் இடம் பெற்று இருந்தது.

அந்த எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டபோது இறந்து கிடந்தவரை பற்றிய மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன. போலீசார் கூறிய தகவலை கேட்டு கோவிந்தசாமியின் அண்ணன் லோகேஷ் ஜோலார்பேட்டைக்கு வந்தார். கோவிந்தசாமி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸ் நிலையத்தில் லோகேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story