எண்ணெய் நிறுவனம் நடத்தி ரூ.87 கோடி சுருட்டல்: விருதுநகர் பருப்பு மில் அதிபரின் மேலும் ஒரு மோசடி அம்பலம்
விருதுநகரை சேர்ந்த தொழிலாளர்கள் பெயரில் வங்கிக்கடன் மோசடி செய்து கைதாகியுள்ள பருப்பு மில் அதிபர், எண்ணெய் நிறுவனம் நடத்தி ரூ.87 கோடி சுருட்டி மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
விருதுநகர்,
விருதுநகரை சேர்ந்தவர் செண்பகம் (வயது 55). இவர் தன் உறவினர் வேல்முருகனுடன் சேர்ந்து கூலித்தொழிலாளர்கள் பெயரில் கோடிக்கணக்கில் விளைபொருட்கள் கடன் பெற்று மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் செண்பகம் வீட்டில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றினர்.
இதனிடையே செண்பகம், தன் மகள் பெயரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை நடத்தினார். இந்த நிறுவனத்தின் மூலம் செண்பகம் மேலும் வங்கிக்கடன் மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.
இவர் 2012–ம் ஆண்டு முதல் போலி ஆவணங்கள் மூலம் போலி நிறுவனங்களின் பட்டியல்களை பெற்று அரசு வங்கியில் ரூ.87 கோடியே 36 லட்சம் கடன் பெற்று மோசடி செய்துள்ளார். இதற்காக இவர் 47 போலி ஆவணங்களை வங்கியிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள சி.பி.ஐ.யின் வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு சிறப்பு பிரிவில் புகார் செய்தனர். அதன் பேரில் சி.பி.ஐ. சிறப்பு பிரிவினர் செண்பகம், அவரது உறவினர்கள் ராஜன், ராஜி, திருமகள் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செண்பகத்தின் வீட்டில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ள ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த மோசடியில் வேறு யாரும் உடந்தையாக உள்ளனரா?, வேறு ஏதேனும் வங்கிகளில் மோசடி நடந்துள்ளதா என்பதும் தெரியவரும். ஏற்கனவே பாமாயில் இறக்குமதி செய்த வகையிலும் செண்பகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.