தனியார் தொலைக்காட்சி ஊழியரிடம் வருமான வரித்துறை அதிகாரி போல் செல்போனில் பேசி ரூ.6 லட்சம் மோசடி
தனியார் தொலைக்காட்சி ஊழியரிடம் வருமான வரித்துறை அதிகாரி போல் செல்போனில் பேசி, அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்தை மர்ம நபர் மோசடி செய்துள்ளார்.
அடையாறு,
தனியார் தொலைக்காட்சி ஊழியரிடம் வருமான வரித்துறை அதிகாரி போல் செல்போனில் பேசி, அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்தை மர்ம நபர் மோசடி செய்துள்ளார்.
சென்னை சைதாபேட்டை சின்னமலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஹென்றி பி குமார் (வயது 50). தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்.
ஹென்றி பி குமாரை செல்போனில் நேற்று முன்தினம் இரவு தொடர்பு கொண்ட ஒருவர் வருமான வரித்துறை அதிகாரி என தெரிவித்து, கணக்கு வழக்குகளை சோதனை செய்ய வேண்டும் என்று அதிகார தோரணையில் கூறினார். அப்போது ஹென்றி பி குமார், அவரது மனைவி, மகள் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை அந்த நபர் கேட்டுள்ளார்.
இதை நம்பி அவர் கேட்ட வங்கி விவரங்கள் அனைத்தையும் ஹென்றி பி குமார் கூறியுள்ளார். கணக்குகளை சரிபார்த்து விட்டு அழைப்பதாக கூறி அந்த நபர் இணைப்பை துண்டித்து விட்டார்.
ஹென்றி பி குமார் கொடுத்த வங்கி விவரங்களை வைத்து அவருடைய குடும்பத்தினர் 3 பேரின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.6 லட்சத்தை வெவ்வேறு கணக்குகளுக்கு அந்த நபர் மாற்றியுள்ளார். காலையில் இந்த மோசடியை அறிந்த ஹென்றி பி குமார் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் சைபர் கிரைம் மூலம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
வங்கி கணக்கு உள்ளிட்ட எந்த விவரங்களையும் மூன்றாவது நபர்களிடம் எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் பகிர வேண்டாம் என வங்கிகள் அறிவுறுத்தி வரும் நிலையில், மோசடி பேர்வழிகள் புதுப்புது யுக்தியை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி இது போன்ற ஆன்லைன் மோசடிகளை அரங்கேற்றுவதும் பெருகி வருகிறது. இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் ஏமாறாமல், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story