ரூ.194 கோடியில் விரிவாக்கம்: திண்டுக்கல்-நத்தம் சாலையில் நிலம் அளவீடு பணி தீவிரம்


ரூ.194 கோடியில் விரிவாக்கம்: திண்டுக்கல்-நத்தம் சாலையில் நிலம் அளவீடு பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Sep 2018 9:42 PM GMT (Updated: 12 Sep 2018 9:42 PM GMT)

திண்டுக்கல்-நத்தம் சாலை ரூ.194 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதையொட்டி, நிலம் அளவீடு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல், மதுரை நகரங்களுக்கு இடையே நத்தம் இருப்பதால் முக்கிய வர்த்தக நகராக திகழ்கிறது. இதனால் நத்தத்துக்கு சரக்கு வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அதிகம் வந்து செல்கின்றன. மேலும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல், பழனி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் நத்தம் வழியாக தான் செல்கின்றனர்.

இதனால் திண்டுக்கல்-நத்தம் சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த சாலையில் பல இடங்களில் அபாய வளைவுகள் உள்ளன. மேலும் பல இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தாழ்வு, மேடான பகுதிகள் உள்ளன. இதன் காரணமாக நத்தம் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அகலப்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் விபத்துகள் குறையாததால் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ரூ.194 கோடி ஒதுக்கீடு

வேகத்தடைகள் அமைக்கப்பட்டதால் வாகனங்கள் விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் திண்டுக்கல்-நத்தம் சாலை, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. மேலும் சாலை விரிவாக்க பணிக்காக அரசு ரூ.194 கோடியை ஒதுக்கியது. திண்டுக்கல்-நத்தம் சாலை 11 மீட்டராக அகலப்படுத்தப்பட இருக்கிறது. இதையடுத்து திண்டுக்கல்-நத்தம் வரை உள்ள அபாய வளைவுகள், தாழ்வான பகுதிகள் அனைத்தும் சரிசெய்யப்படுகின்றன.

அதேபோல் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் 5 கி.மீ. தூரத்துக்கு நான்கு வழிப்பாதை அமைக்கப்பட இருக்கிறது. மற்ற இடங் களில் இருவழிப்பாதை அமைக்கப்பட உள்ளது. இந்தநிலையில் நத்தம் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக எந்த இடங்களில் எவ்வளவு மீட்டர் அகலப்படுத்த வேண்டும் என்று கணக்கிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது திண்டுக்கல்-நத்தம் சாலையில் நிலம் அளவீடு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பின்னர் சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story