சேலத்தில் இரவில் கொட்டி தீர்த்த கனமழை


சேலத்தில் இரவில் கொட்டி தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 15 Sept 2018 3:45 AM IST (Updated: 15 Sept 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி சில இடங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம்,

சேலத்தில் நேற்று காலையில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்லும் நபர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். மதியம் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை.

இந்தநிலையில், சேலம் மாநகர் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். சேலம் பழைய மற்றும் புதிய பஸ்நிலையம், அஸ்தம்பட்டி, கிச்சிபாளையம், அம்மாபேட்டை, சூரமங்கலம், அன்னதானப்பட்டி, அழகாபுரம், மெய்யனூர், மணக்காடு, கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. களரம்பட்டி, மணக்காடு ராஜகணபதி நகர், மணியனூர், சங்கர் நகர், பள்ளப்பட்டி, சின்னேரிவயல்காடு, பெரமனூர் நாராயண பிள்ளை தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் தெருவில் ஆறாக ஓடியதை காணமுடிந்தது. மழை பெய்ததால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இரவில் தூங்கமுடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

பெரியார் மேம்பாலத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றதால் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தவாறு மெதுவாக சென்றன. சேலத்தில் பெய்த கன மழையானது நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் மாநகரில் குளிர்ந்த காற்று வீசியதுடன் மிதமான சீதோஷ்ணநிலை காணப்பட்டது.

Next Story