காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவிக்கு கத்திவெட்டு


காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவிக்கு கத்திவெட்டு
x
தினத்தந்தி 15 Sept 2018 3:00 AM IST (Updated: 15 Sept 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவியை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கண்ணமங்கலம்,


கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ரேணுகொண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலை அவர் வழக்கம் போல் சைக்கிளில் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு லிங்காபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது படவேடு மங்களாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் பசுபதி (வயது 22) என்பவர் மாணவியை வழிமறித்து கத்தியால் பல்வேறு இடங்களில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் கத்தியால் வெட்டிய பசுபதியை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் பசுபதி, மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததும், அடிக்கடி மாணவியை வழி மறித்து காதலிக்கும்படி வற்புறுத்தி வந்ததும் தெரியவந்தது. ஆனால் மாணவி, பசுபதியை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் கத்தியால் வெட்டியதாக போலீசில் கூறியுள்ளார். அது மட்டுமின்றி பசுபதி ஏற்கனவே மன நலம் பாதிப்புக்கு உள்ளானவர் என்பதும், இதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் போக்சோ, கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பசுபதியை கைது செய்தனர். 

Next Story