பெரியாரின் கொள்கைகள் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது - நடிகர் சத்யராஜ்
பெரியாரின் கொள்கைகள் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது என்று ஈரோட்டில் நடிகர் சத்யராஜ் கூறினார்.
ஈரோடு,
ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க. மாநில மாநாட்டில் நடிகர் சத்யராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நான் தந்தை பெரியார் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கிறேன். ஆனால் பேரறிஞர் அண்ணா தொடர்பான நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இன்று தந்தை பெரியார், அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பை ம.தி.மு.க. அளித்து உள்ளது. அதுமட்டுமின்றி விழாவிற்கு வரும் வழியில் மேட்டுப்பாளையத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வாய்ப்பை ம.தி.மு.க. தோழர்கள் ஏற்படுத்தி கொடுத்தனர்.
இந்த மாநாட்டுக்கு வரும் வழியில் பதாகைகளை பார்வையிட்டவாறு வந்தேன். அதில் எங்கும் தலைவர் வைகோவை புகழ்ந்து வாசகங்கள் இல்லை. தந்தை பெரியார் கொள்கை மொழிகள் மட்டுமே இருந்தன. வழக்கமாக நான் பெரியார் திடலுக்கு நிகழ்ச்சிகளுக்காக செல்லும்போது, பள்ளிக்கூடத்துக்கு செல்வதுபோன்று இருக்கும். அதே உணர்வுதான் இந்த மாநாட்டுக்கு வந்தபோதும் இருந்தது.
விழா மேடையில் வைத்திருக்கும் பதாகையிலும் வைகோவின் புகைப்படம் இல்லை. பெரியார், அண்ணாவின் படங்கள் மற்றும் இயக்க தலைவர்களின் படங்கள் மட்டுமே உள்ளன. இதில் இருந்தே வைகோ தனக்காக இல்லாமல் சமுதாயத்திற்காக தன்னையே ஒப்படைத்துவிட்டவர் என்பது தெரிந்துகொள்ளலாம்.
அவருடைய அறிவையும், ஆற்றலையும், வீரத்தையும், தியாகத்தையும் நன்கு பயன்படுத்த வேண்டும். அவர் கழுத்தில் குப்பி அணியாத பிரபாகரன் என்பது, வன்னிய காடுகளுக்கு அவர் சென்று வந்த நிகழ்வை புரிந்துகொண்டால் தெரியவரும்.
தந்தை பெரியாரின் கொள்கைகள் இளம் தலைமுறையினரை மிகவும் கவர்ந்து வருகிறது. சமீபத்தில் என்னுடைய மருமகள் என்னிடம், நான் தந்தை பெரியார் பற்றி அவளுக்கு எதுவுமே சொல்லி கொடுக்கவில்லை என்று கோபித்துகொண்டாள். நான் பெரியாராக நடித்தது மட்டுமின்றி, 30 ஆண்டுகளாக பெரியார் கொள்கைபடியே வாழ்ந்து வருகிறேன் என்பதை கூறினேன். தற்போது அவள் சமூக இணையதளங்களில் பெரியாரின் கொள்கைகளை பரப்பி வருகிறார். அவளுக்கு வயது 21 தான் ஆகிறது. இவ்வாறு இளைய தலைமுறையும் விரும்பும் தலைவராக தந்தை பெரியார் இருக்கிறார்.
அதற்கு காரணம் பெரியாரின் சமூக நீதி. எது சமூக அநீதி என்று தெரிந்துகொண்டால் சமூக நீதி எது என்பதை புரிந்துகொள்ளலாம். இங்கே ஜாதிக்கு காவலாக மதமும், மதத்திற்கு காவலாக கடவுளும் இருக்கிறார்கள். சமூகநீதியை காக்கும் கட்சியாக ம.தி.மு.க. இருக்கிறது. வைகோவை பொறுத்தவரை இந்த சமூகத்திற்காக போராடுவதையும், ஜெயிலுக்கு செல்வதையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்.
அவர் ஒரு விஷயத்தை எதிர்க்கிறார் என்றால், நானும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வேன். காரணம் அவருடைய அறிவின் மீதும், ஆற்றலின் மீதும் இருக்கும் நம்பிக்கை.
இவ்வாறு நடிகர் சத்யராஜ் கூறினார்.