கட்டணத்தை உயர்த்த கோரி கர்நாடகத்தில் ரிக் லாரிகள் 6-வது நாளாக வேலை நிறுத்தம்


கட்டணத்தை உயர்த்த கோரி கர்நாடகத்தில் ரிக் லாரிகள் 6-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Sept 2018 4:15 AM IST (Updated: 16 Sept 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

கட்டணத்ைத உயர்த்த கோரி கர்நாடகத்தில் ரிக் லாரிகள் 6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.

பெங்களூரு, 

கட்டணத்ைத உயர்த்த கோரி கர்நாடகத்தில் ரிக் லாரிகள் 6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.

வேலை நிறுத்தம்

கட்டணத்தை உயர்த்த கோரி கர்நாடக ஆழ்குழாய் கிணறு தோண்டும் (ரிக்) லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரிக் லாரிகள் வேலை நிறுத்தம் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெங்களூரு நகர மாவட்டத்தை சேர்ந்த சுமார் 450 ரிக் லாரிகள் கெங்கேரியில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் தோண்டப்படும் ஆழ்குழாய் கிணறு அமைத்தல் மற்றும் தனியார் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இழப்பு தான் ஏற்படுகிறது

இதுகுறித்து கர்நாடக ரிக் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் என்.டி.அரசு கூறியதாவது:-

டீசல் விலை உயர்ந்துவிட்டதால் ஆழ்குழாய் அமைக்கும் பணிக்கு செலவு அதிகமாகிவிட்டது. நாங்கள் அரசின் ஆழ்குழாய் அமைக்கும் பணிகளை டெண்டர் எடுத்து செய்கிறோம். ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்க ஒரு அடிக்கு அரசு ரூ.70 கொடுக்கிறது. இதனால் எங்களுக்கு தொழிலில் இழப்பு தான் ஏற்படுகிறது.

தொழில் நலிவடைந்துவிட்டது

இந்த ஆழ்குழாய் கிணறு தோண்டும் தொழிலே நலிவடைந்துவிட்டது. அதனால் தான் அரசு நிர்ணயித்துள்ள ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்கான கட்டணத்தை உயர்த்துமாறு கேட்டு நாங்கள் இந்த வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கிறோம்.

நாங்கள் ஒரு அடிக்கு ரூ.135 வழங்குமாறு கேட்கிறோம். இதில் 18 சதவீத சரக்கு-சேவை வரியை நாங்கள் செலுத்துகிறோம். அடிக்கு ரூ.125 நிர்ணயம் செய்வதாக இருந்தால் சரக்கு-சேவை வரி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்.

3 ஆயிரம் லாரிகள்

இந்த கோரிக்கையை நாங்கள் முன்வைத்து இந்த வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கிறோம். கர்நாடகம் முழுவதும் 3 ஆயிரம் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

17-ந் தேதி (அதாவது நாளை) அரசு அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளோம். எங்களின் கோரிக்கையை ஏற்கும் வரை இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடரும். ஒரு ஆழ்குழாய் கிணறு தோண்டும் லாரியின் விலை ரூ.1¾ கோடி முதல் ரூ.2 கோடி வரை உள்ளது.

இதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எங்களால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. இந்த தொழிலை நம்பி 3 லட்சம் பேர் உள்ளனர். அதனால் எங்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்.

இவ்வாறு என்.டி.அரசு கூறினார்.

Next Story