வெவ்வேறு விபத்துகளில் காவலாளி உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் காவலாளி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 20 Sept 2018 3:00 AM IST (Updated: 20 Sept 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் காவலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பழனி, 

பழனி முல்லைநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 70). இவர், வண்டி வாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை இவர் வழக்கம் போல் வேலை முடிந்து தனது மொபட்டில் பழனி நோக்கி வந்துகொண்டிருந்தார். அவருக்கு பின்னால் பழனி பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த நவ்பிக் (18) தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

உடுமலை-பழனி சாலையில் சண்முகநதி அருகே வந்த போது திடீரென நவ்பிக் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி முருகேசனின் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நவ்பிக்கும், முருகேசனும் படுகாயமடைந்தனர். மற்ற இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக பழனி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழனி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைரோடு அருகேயுள்ள மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி முருகத்தூரான்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலமுருகன் (வயது 27). இவர், கல்லூப்பட்டியை சேர்ந்த தனது நண்பர் பெரியாம்பளை (34) என்பவருடன் முருகத்தூரான்பட்டியில் இருந்து பள்ளப்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காயம் அடைந்த பெரியாம்பளைக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story