போலீஸ் பாதுகாப்புடன் சென்று குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்


போலீஸ் பாதுகாப்புடன் சென்று குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்
x
தினத்தந்தி 20 Sep 2018 10:00 PM GMT (Updated: 20 Sep 2018 9:47 PM GMT)

குழந்தை திருமணத்தை போலீஸ் பாதுகாப்புடன் சென்று தடுத்து நிறுத்த வேண்டும் என்று களப்பணியாளர்களுக்கு பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

வேலூர், 


வேலூர் மாவட்ட சமூக நலத்துறை, சைல்டுலைன், ஹேண்ட் இன் ஹேண்ட் சார்பில் சமூக நலத்துறை களப்பணியாளர்கள், சைல்டுலைன் களப்பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. ஹேண்ட் இன் ஹேண்ட் துணை பொது மேலாளர் பிரேம் ஆனந்த், முதன்மை மேலாளர் வெங்கட்ராமன், வேலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழும தலைவர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் வரவேற்றார்.

பயிற்சி முகாமிற்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் குழந்தை திருமணங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பெண்ணின் பெற்றோருக்கு போதிய கல்வியறிவு, விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்தும், சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்வதால் அந்த பெண்ணிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் குறித்து களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தால், அது உண்மை தானா? என முதலில் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சென்று குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். போலீஸ் பாதுகாப்புடன் செல்லாமல் தனியாக களப்பணியாளர்கள் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றால், பெண்ணின் உறவினர்கள் களப்பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும். குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெண்ணின் பெற்றோருக்கு எடுத்துக்கூறி, சிறுமியை அரசு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்கும் பணியில் களப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, வேலூர் சிறப்பு சிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா முதுநிலை திட்ட மேலாளர் ஏழுமலை, நிர்வாகி பிரேம்குமார் உள்பட பலர் குழந்தை திருமணம் தடை சட்டம், இளைஞர் நீதிசட்டம், ‘போக்சோ சட்டம்’, வரதட்சணை தடுப்பு சட்டம் குறித்து களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

முடிவில் வேலூர் மாவட்ட ஹேண்ட் இன் ஹேண்ட் திட்ட துணை மேலாளர் வேலாயுதம் நன்றி கூறினார்.


Next Story