கரூரில் கல்குவாரி உரிமையாளர்களின் வீடுகளில் 2-வது நாளாக சோதனை


கரூரில் கல்குவாரி உரிமையாளர்களின் வீடுகளில் 2-வது நாளாக சோதனை
x
தினத்தந்தி 22 Sept 2018 4:57 AM IST (Updated: 22 Sept 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக கரூரில் உள்ள கல்குவாரி உரிமையாளர்களின் வீடுகளில் நேற்று 2-வது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கட்டு, கட்டாக ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம் க.பரமத்தி, பவுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே வசந்தம் நகரை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் பொன்விநாயகா என்ற பெயரில் க.பரமத்தி அருகே உள்ள காருடையாம்பாளையத்திலும், காட்டுமுன்னூரில் பாலவிநாயகா என்ற பெயரில் தங்கராஜூம், திருமுருகன் என்ற பெயரில் முருகேசனும் மற்றும் சடையம்பாளையத்தில் கற்பகவிநாயகா என்ற பெயரில் மற்றொரு பொன்னுசாமியும், வல்லிபுரம் பிரிவு பகுதியில் விநாயகா என்கிற பெயரில் பழனியப்பனும் கல்குவாரிகளை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, இந்த குறிப்பிட்ட குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணல் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு அதிகளவு விற்கப்பட்டது. இந்த கல்குவாரிகளில் அரசுக்கு கணக்கு காட்டாமல் கற்கள் ஏற்றுமதி செய்து வியாபாரம் நடப்பதாகவும், இதன்மூலம் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு, பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து திருச்சி வருமானவரித்துறை இணை ஆணையர் நவீன்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் கார்களில் நேற்று முன்தினம் கரூருக்கு வந்தனர். பின்னர் கல்குவாரி வைத்து நடத்தி வரும் கரூர் வசந்தம் நகரை சேர்ந்த பொன்னுசாமி மற்றும் தங்கராஜ், பழனியப்பன் உள்ளிட்டோரது வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான கல்குவாரிகளிலும் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். தொடர்ச்சியாக விடிய, விடிய இரவு முழுவதும் இந்த சோதனை நடந்தது.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்தது. கரூரிலுள்ள கல்குவாரி உரிமையாளர்களின் வீட்டிலிருந்து கட்டு, கட்டாக முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் எடுத்து சென்றதை காண முடிந்தது. அப்போது கருப்பு பணம் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து கேட்டபோது, அதிகாரிகள் உரிய பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

அதன் பின்னர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே கோவை ரோட்டில் கல்குவாரி உரிமையாளர்கள் கட்டுப்பாட்டில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பொக்லைன் எந்திரம், போர்வெல் லாரி ஆகியவற்றை வாடகைக்கு கொடுக்கும் அலுவலகத்தில் சோதனை நடந்தது. அப்போது, இதுநாள் வரை பல்வேறு பணிகளுக்காக பொக்லைன் உள்ளிட்டவை அனுப்பப்பட்டு, வாடகை பெற்றதற்கு உரிய முறையில் வருமான வரி செலுத்தப்பட்டிருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டனர். அந்த ஒரே கட்டிடத்தின் அருகருகே விநாயகா, கற்பக விநாயகா, பாலவிநாயகா என்கிற பெயர்களில் அலுவலகம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

க.பரமத்தி அருகே பாலவிநாயகா கல்குவாரியை தவிர மற்ற குவாரிகளில் நேற்று மதியம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்தனர். மேலும் குவாரிகளில் வீடியோ, புகைப்படம் எடுத்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பொன்னுசாமி உள்ளிட்ட 5 பேரும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மற்றும் 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் (சனிக்கிழமை) சில இடங்களில் சோதனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story