மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு


மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு
x
தினத்தந்தி 24 Sept 2018 4:15 AM IST (Updated: 24 Sept 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

திருச்சி,

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று திருச்சி மாவட்ட சிலம்பம் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. போட்டிகள் சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளாக வயது மற்றும் உடல் எடை அடிப்படையில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றன. மாவட்ட சிலம்பம் கழக தலைவர் இங்கர்சால் தலைமை தாங்கினார். பேராசிரியர் மலர்மன்னன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் திருச்சி நகரில் தில்லைநகர், உறையூர் மற்றும் முசிறி, திருவெறும்பூர், துறையூர், மணப்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து 15 கிளப்களை சேர்ந்த சுமார் 250 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தனித்திறமை மற்றும் நேரடி போட்டி என இரு வகையில் மொத்தம் 29 பிரிவுகளாக நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டமும் வழங்கப்பட்டது.

‘தனித்திறமை மற்றும் நேரடி போட்டிகளில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்தவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில போட்டி வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வேலூரில் நடைபெற உள்ளது’ என்று திருச்சி மாவட்ட சிலம்பம் கழக செயலாளர் மதன் கென்னடி கூறினார்.

Next Story