தர்மபுரி அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்


தர்மபுரி அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2018 3:30 AM IST (Updated: 26 Sept 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த கல்லூரியில் 4500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் படிக்கும் இந்த கல்லூரியில் மாணவிகளுக்கு கழிப்பிட வசதி போதிய அளவில் இல்லை. மாணவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. எனவே மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவில் புதிய கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

ஆங்கிலத்துறையை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இயற்பியல் துறை கலையரங்கில் வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பதால் வாரத்தில் 3 நாட்கள் ஆங்கிலத்துறை சார்ந்த வகுப்புகளை ரத்து செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஆங்கிலத்துறையில் விரிவுரையாளர்கள் போதிய அளவில் நியமிக்கப்படாததால் ஒருநாளில் 2 வகுப்புகள் மட்டுமே நடக்கின்றன. சில நாட்கள் தரையிலேயே அமர்ந்து படிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் ஆங்கிலத்துறை மாணவ-மாணவிகளின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆங்கிலத்துறை வகுப்புகளுக்கு தனி வகுப்பறைகளை ஏற்படுத்த வேண்டும். இந்த துறையில் போதிய அளவில் விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதுதொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கல்வித்துறை உயர்அதிகாரிகளின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு சென்று தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகளின் தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story