திருச்சி முக்கொம்பில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்கான மண் பரிசோதனை இன்றுடன் நிறைவு


திருச்சி முக்கொம்பில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்கான மண் பரிசோதனை இன்றுடன் நிறைவு
x
தினத்தந்தி 27 Sept 2018 4:30 AM IST (Updated: 27 Sept 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி முக்கொம்பில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்கான மண் பரிசோதனை செய்யும் பணி இன்றுடன்(வியாழக்கிழமை) நிறைவடைகிறது.

ஜீயபுரம்,

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையின் 9 மதகுகள் கடந்த மாதம் 22-ந் தேதி இடிந்து விழுந்தன. இதையடுத்து உடைந்த மதகுகள் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க அங்கு ரூ.95 லட்சம் செலவில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். மதகுகள் உடைந்த இடத்தில் பாறாங்கற்கள், கருங்கற்கள், கிராவல்மண் கொட்டி தடுப்பு ஏற்படுத்தி நீர் வெளியேறுவது தடுக்கப்பட்டது. ஆனாலும் பாறாங்கற்களுக்கு இடையில் நீர் கசிவது நிற்கவில்லை. தண்ணீர் வெளியேறுவதை தடுக்க தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே 1-வது மதகு முதல் 18-வது மதகு வரை மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 5 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. இந்த பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. நேற்றும் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் அணை உடைந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை அளவீடு செய்யும் பணி ஏற்கனவே முடிந்துள்ளது.

அடுத்ததாக கதவணை கட்ட வேண்டிய இடத்தில் மண் பரிசோதனை செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. புதிய கதவணை கட்டப்பட உள்ள இடத்தில் மண்ணின் தரம் எப்படி உள்ளது?. அங்கு எவ்வளவு ஆழத்தில் பில்லர்(தூண்) எழுப்ப வேண்டும் என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மண் பரிசோதனை முடிந்த பிறகே, அடுத்த கட்ட பணிகள் தொடங்கும்.

இந்தநிலையில் மண் பரிசோதனை இன்று(வியாழக்கிழமை) முடியும் என்றும், அதன்பிறகு அரசுக்கு இது குறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே முக்கொம்பு சுற்றுலாத்தலம் கடந்த 23-ந் தேதி முதல் திறக்கப்பட்டது. தற்போது பள்ளிகளில் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் பலர் முக்கொம்பில் காவிரி ஆற்றில் குளித்தும், பூங்காவில் விளையாடியும் மகிழ்கிறார்கள்.

Next Story