கலால் அதிகாரிகள் என கூறி டாஸ்மாக் பார் உரிமையாளரிடம் பணம் பறிப்பு, 4 பேர் கைது


கலால் அதிகாரிகள் என கூறி டாஸ்மாக் பார் உரிமையாளரிடம் பணம் பறிப்பு, 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2018 11:16 PM GMT (Updated: 1 Oct 2018 11:16 PM GMT)

அன்னாவாசல் அருகே கலால் அதிகாரிகள் என கூறி டாஸ்மாக் பார் உரிமையாளரிடம் பணம் பறித்த முன்னாள் வருவாய் ஆய்வாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பெருமாநாட்டில் ஒரு டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த கடையின் உள்ளே அதே பகுதியை சேர்ந்த சின்னமணி என்பவர் பார் நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை சின்னமணி டாஸ்மாக் பாரை திறந்து வைத்து சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது டிப்-டாப் உடையுடன் 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்தது. பின்னர் அங்கிருந்த சின்னமணியிடம், அந்த கும்பல் நாங்கள் கலால் அதிகாரிகள், டாஸ்மாக் பாரை சோதனை செய்ய வேண்டும் என கூறி, அங்கு சோதனையிட்டுள்ளனர். ஆனால் அங்கு எந்த மதுவகைகளும் இல்லை. இதையடுத்து 5 பேரும் சேர்ந்து சின்னமணியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவரது சட்டை பையில் இருந்த ரூ.200-ஐ பறித்தனர்.

பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சின்னமணி அங்கிருந்தவர்களின் உதவியுடன், 5 பேரையும் பிடித்தார். இதில் ஒருவர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இதையடுத்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அந்த 4 பேரையும் பிடித்து, சென்று போலீஸ் நிலையத்திற்கு வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் புதுக்கோட்டை போஸ்நகரை சேர்ந்த கோவிந்தசாமி (வயது 40), இலுப்பூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (40), இலுப்பூர் குரும்பபட்டியை சேர்ந்த கணேசன் (34), திருச்சி மன்னார்புரத்தை சேர்ந்த பவுல்ராஜ் (24) என்பதும் தெரியவந்தது. மேலும் கோவிந்தசாமி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தபோது, ஒரு கொலை முயற்சி வழக்கு சம்பந்தமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.

மேலும் கோவிந்தசாமி சிறையில் இருந்தபோது, அவருடன் அதே சிறையில் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பாலகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் திட்டம் தீட்டி இந்த சோதனை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசலை சேர்ந்த நாகராஜ் (30) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று அன்னவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story