கிராமத்தை விட்டு குடும்பத்தை ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு: கல்லூரி மாணவி, ‘பேஸ்புக் லைவ்’ வீடியோவில் தற்கொலை முயற்சி


கிராமத்தை விட்டு குடும்பத்தை ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு: கல்லூரி மாணவி, ‘பேஸ்புக் லைவ்’ வீடியோவில் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 2 Oct 2018 11:30 PM GMT (Updated: 2 Oct 2018 9:33 PM GMT)

விஜயாப்புரா அருகே, கிராமத்தை விட்டு குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டதாக பி.யூ. கல்லூரி மாணவி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியும் பிரச்சினை தீரவில்லையே எனக்கூறி ‘ேபஸ்புக் லைவ்’ வீடியோ பதிவிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

பெங்களூரு,

விஜயாப்புரா மாவட்டம் ஹஞ்சினாலா தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் லதா சந்து சவுகான்(வயது 18). இவர், நேற்று முன்தினம் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ‘லைவ்’ வீடியோ பதிவிட்டார்.

வீடியோவில் பேசிய லதா, ‘நிலப்பிரச்சினை தொடர்பாக எங்கள் குடும்பத்தை கிராமத்தை விட்டு 5 ஆண்டுகள் ஒதுக்கி வைத்துள்ளனர். இதுதொடர்பாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு புகார் கடிதம் எழுதினோம். தற்போதைய எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான எம்.பி.பட்டீலை குடும்பத்துடன் சந்தித்து புகார் செய்தோம். இருப்பினும் பிரச்சினை தீரவில்லை. இதனால் பி.யூ. கல்லூரியில் படிக்கும் எனது படிப்பு தடைபட்டு உள்ளது. எனது தம்பியின் கல்வியும் பாதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களே!, உங்களிடம் கைக்கூப்பி ஒரு கோரிக்கை வைக்கிறேன். நானும் உங்களுக்கு ஒரு மகள் தானே?, எனக்கு கல்வி பயிலும் உரிமை இல்லையா?. இந்த பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று பேசினார்.

மேலும், அவர் தனது அருகில் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், லதா தற்கொலைக்கு முயன்றதை பார்த்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், லதாவின் குடும்பத்தை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்து இருப்பது பற்றி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.

Next Story